தெற்கிலிருந்து ஒரு சூரியன் - ஒரு மதிப்பீடு

November 1, 2017

- மருதன் - 

சந்தேகமே வேண்டாம். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, திராவிட இயக்கத்தை, குறிப்பாக கருணாநிதியைக் கொண்டாடும் ஒரு தொகுப்பு. மு.க. ஸ்டாலின் முதல் டேவிட் ஷுல்மன் வரை குடும்பத்தினர், நெருக்கமானவர்கள், ஆதரவாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள், மாற்றுக் கட்சியினர், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று அனைவருமே புத்தகத்தின் நாயகரை மிகவும் நல்ல விதமாகவே நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

கருணாநிதி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, ஆனால் அவர் கொண்டுவந்துள்ள ஆரோக்கியமான மாற்றங்களை வரவேற்கிறேன் என்கிறார் நல்லகண்ணு. கை ரிக்ஷா ஒழிப்பு, சமத்துவபுரம், ஏழைகளுக்குக் குடியிருப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து அங்கீகரிக்கிறார் அவர். ஒரு முதல்வர் என்னும் எல்லைக்குள் இருந்துகொண்டு கருணாநிதி போராடினார் என்கிறார் கொளத்தூர் மணி. தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு ஐம்பது சதவிகிதித்துக்கும் அதிகமாக உயரக் காரணமாக இருந்த கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி என்கிறார் யோகேந்திர யாதவ்.

டேவிட் ஷுல்மன் எழுதுகிறார். ‘திராவிடக் கோட்பாட்டின் தொடர்ச்சியான ஆற்றலை கருணாநிதியின் படைப்புகளிலும் செயல்பாடுகளிலும் முழுவதுமாகக் காணமுடியும். பகுத்தறிவுக் கோட்பாடும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய ஆழமான சிந்தனைகளும் பழந்தமிழ் மரபுடன் அவருக்கு இருந்த பிடிப்பும் அவருக்குப் பக்கபலமாக இருந்தன. திராவிட இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்த இலக்கிய அழகியல் உணர்வும், பேச்சு வன்மையும் கருணாநிதியிடம் மிளிர்வதைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.’

இதையெல்லாம் பார்க்கும்போது இந்நூலை hagiography என்று வகைப்படுத்துவதே சரியாக இருக்கும். ஆனால் தமிழுக்கு இந்த வகை எழுத்து புதிது என்றா நினைக்கிறீர்கள்? இதே இந்து குழுமத்திலிருந்து (ஆங்கிலம்) திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம் கோவில், சபரிமலை போன்றவற்றைப் புகழ்ந்து நூல்கள் வந்ததில்லையா? ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், எம்.ஜி.ஆர் (தமிழ்) போன்றோரின் சாதனைகளைக் கொண்டாடும் தொகுப்புகள் வந்ததில்லையா? இருந்தும், தெற்கிலிருந்து ஒரு சூரியன் உதிப்பதற்கு முன்பே அட்டையைப் பார்த்து சமூகத்தின் சில நல்லுள்ளங்கள் கொதித்தெழுந்தது ஏன்? மதிப்பீடுதான் வேண்டும், கொண்டாட்டம் அல்ல என்று தர்க்கக் குரல் எழுப்பியது ஏன்?

1952ம் ஆண்டு பராசக்தி வெளிவந்தபோது அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காங்கிரஸுக்கு எதிரான கருத்துகளுக்காகவும் நாத்திகவாதத்துக்காகவும் (இப்படம்) விமரிசிக்கப்பட்டது. மதம், அரசியல், பெண்கள் தொடர்பாக நிலவிவந்த கருத்துகளுக்கு எதிராக இந்தப் படம் இருந்தது’ என்பதால் எழுந்த எதிர்ப்பு இது என்கிறார் எம்.எஸ்.எஸ். பாண்டியன். காங்கிரஸ் கட்சியிடமிருந்து மட்டுமல்ல பத்திரிகைகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பும் விமரிசனங்களும் கிளம்பின. பராசக்தியின் வசனங்கள் பாட்டுப் புத்தகங்களைப் போல் அச்சிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றதைக் கண்டு எரிச்சலடைந்த பலரும் அந்தப் படத்தின் வசனகர்த்தாவான கருணாநிதிமீது பலவிதமான அவதூறுகளையும் தாக்குதல்களையும் தொடுத்தனர். கருணாநிதி வெறுப்பு என்பது தமிழகத்தில் உருதிரள ஆரம்பித்தது அப்போதுதான். அந்த வெறுப்பைத் திராவிட இயக்கத்தின்மீதான வெறுப்பின் நீட்சியே என்று சொல்லலாமா?

சமூகத்தில் அதுகாறும் ஆதிக்கம் செலுத்திவந்த கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் தலைகீழாகத் திருப்பி நிற்க வைத்ததால் உண்டான வெறுப்பு அது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வாழ்க்கை என்பதால் ஒரு நூற்றாண்டு வெறுப்பு கருணாநிதியைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது. 1957ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தொடர்ந்து அறுபதாண்டுகளாக மக்கள் பிரநிதியாக நீடித்துவருகிறார் கருணாநிதி. ஐந்து முறை முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். வெறுப்பின் கனல் குறைவதாக இல்லை, இன்னமும்.

அது குறைய கால அவகாசம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். அதனால்தான், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிவரும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் (ஆங்கில தி இந்துவின் வாசகர்களுக்கான ஆசிரியர்), தன் பணி மிகவும் சவாலானது என்கிறார். அவர் காலத்து திரையுலகம், ஊடகம், அரசியல் சூழல் ஆகியவை இன்றைய காலகட்டத்தோடு பெரிதும் மாறுபட்டவை. இதை நுணுக்கமாகவும் திறந்த மனத்தோடும் புரிந்துகொள்வது சவாலானது. ‘அதிமுகவில் இப்போது காணப்படும் அர்த்தமற்ற கோஷ்டிப் பூசலை, திகவிலிருந்து விலகி திமுகவைத் தொடங்க நேர்ந்த தலைவர்களின் உள்ளக் குமுறலோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளமுடியாது.’

உண்மையில், திராவிட இயக்கத்தின் சமூக, அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்புலம் பற்றிய நல்ல புரிதல் கொண்டவர்களால் மட்டுமே கருணாநிதியின் பங்களிப்பையும் அவருடைய நிறை, குறைகளையும் ஆராயவும் மதிப்பிடவும் முடியும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எல்லா வகையிலும் பின்தங்கியிருந்த தமிழ்நாடு இன்று தமிழகத்தின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் திராவிட இயக்கம் என்கிறார் பிரேர்ணா சிங். (பிரௌன் பல்கலைக்கழகம்).

1900களுக்கு முன்பிருந்த மதராஸ் மாகாணத்தில் கற்றவர்களில் பெரும்பகுதியினர் மேல் சாதியினர், குறிப்பாக பிராமணர்கள். எஞ்சியிருந்த பெரும்பான்மை சமூகத்துக்காக நீதிக்கட்சி சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியபிறகுதான் நிலைமை மாற ஆரம்பித்தது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றைப் பெரும்பான்மை மக்களும் பெற ஆரம்பித்தபோது தமிழ்நாடு வளர்ச்சி காண ஆரம்பித்தது. மற்றொரு தளத்தில், ‘சுயமரியாதை இயக்கம் வளர்ந்து நீதிக் கட்சியையும் உள்ளடக்கி திராவிடர் கழகமானபோது, கலாசாரரீதியாக(வும்) தமிழ் மறுமலர்ச்சிக்கு உழைத்தனர்.’

1891 மக்கள் தொகை அறிக்கையை அருகில் வைத்துக்கொண்டு இன்றுள்ள நிலையை ஆராயும்போது திராவிட இயக்கம் தமிழகத்துக்குச் செய்தது என்ன என்பது புரியவரும். ‘தமிழ்நாடு, திராவிட இயக்கம் என்றால், துணை தேசியத்தின் வழியே அவர்கள் அடைந்த வளர்ச்சியே என் நினைவில் இருக்கும். இந்தியாவுக்கான பாடம் இதில் உண்டு’என்கிறார் பிரேர்ணா சிங்.

தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்துவரும் நலங்கிள்ளியுடன் நேற்று உரையாடிக்கொண்டிருந்தேன். தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்த கருணாநிதி எதுவுமே செய்ததில்லை என்று குற்றம்சாட்டினார் அவர். ‘ஜெயலலிதாவைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்; தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப அவர் தன்னைத் தகவமைத்துக்கொண்டவர். பேரறிவாளனை நீங்கள் விடுவிக்காவிட்டால் நான் விடுவிப்பேன் என்று தில்லிக்கே காலக்கெடு விதித்து தமிழகத்தின் அதிகாரத்தை நிலைநாட்டினார். முழக்கமிட்டதைத் தவிர்த்து கருணாநிதி மாநில உரிமைகள் குறித்து ஏதேனும் செய்திருந்தால் எனக்குச் சொல்லுங்கள்?’

இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா தொடங்கிவைத்த மரபில் இன்றுவரை தலித் சிந்தனையாளர்கள் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் கருணாநிதியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமரிசித்து வருகிறார்கள். சிபிஐ, சிபிஎம் தொடங்கி புரட்சிகர அரசியலை முன்வைக்கும் மகஇக வரை தோழர்கள் பலரும் கருணாநிதியைக் கூர்மையாக விமரிசித்தவர்கள்தாம்.

கருணாநிதி மற்றும் திமுகமீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்த நாகநாதன்கூட மறுக்கவில்லை. இதே நூலில் இடம்பெற்றுள்ள தனது பேட்டியில், ‘அமைப்புரீதியாகவே இங்கே ஊழல் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு நாம் முகம் கொடுக்காமல் இதை விவாதிக்கமுடியாது’என்று மட்டுமே சொல்கிறார். அதேபோல், சித்தாந்தத் தளத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதையும் இளைஞர்களின் பங்கேற்பு கட்சியில் குறைந்துள்ளதையும்கூட அவர் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்.

வெறுப்பும் விமரிசனமும் ஒன்றல்ல என்பதற்கே இந்த எடுத்துக்காட்டுகள். மேற்படி விமரிசனங்களை முன்வைத்த எவருமே சமகால வரலாற்றில் கருணாநிதி வகித்த பாத்திரத்தின் முக்கியத்துவத்தை முற்றாக மறுதலிக்கவில்லை. திராவிட இயக்கத்தின்மீது இவர்களுக்குப் பல குற்றச்சாட்டுகளும் வருத்தங்களும் ஏமாற்றங்களும் இருப்பது நிஜம். இருந்தும், திராவிட இயக்கத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் இவர்கள் தயங்குவதில்லை.

நீதிக்கட்சி தலைவர்கள் தொடங்கி பெரியார் முதல் கருணாநிதிவரை அனைருமே விமரிசனங்களுக்கு உட்பட்டவர்கள்தாம். அனைவரையுமே கறாராகவும் விருப்புவெறுப்பின்றியும் மதிப்பிடவேண்டியது அவசியம். எவரையுமே புனித பிம்பங்களாக மாற்றவேண்டியதில்லை. எவரையுமே பீடத்தில் நிற்கவைத்து வழிபடவேண்டியதில்லை. வெறுப்பு வேறு வகைப்பட்டது. அது முன்முடிவுகளைத் தின்று வளர்வது. வெறுப்புடன் உரையாடுவது சாத்தியமில்லை. விமரிசனங்களோடு உரையாட மறுப்பது ஜனநாயக விரோதம்.

பெரியாரை ஒரு பிராமண வெறுப்பாளராக மட்டும் சுருக்கிவிடப் பலரும் முயன்றுவருவதைப் பார்க்கிறோம். கருணாநிதியையும்கூட அவ்வாறே சுருக்க அவர்கள் தலைப்படுகிறார்கள். ராஜன் குறை இதை மறுக்கிறார். ‘சுதந்திரவாத அரசியல் அமைப்புதான் திராவிட இயக்கத்தின் செயல்தளம். ஒருவர் தன் சாதி சார்ந்த கலாசார அம்சங்களை அகவாழ்வில் பேணுவதைச் சுதந்திரவாதம் மறுக்க இயலாது... பிராமணர்களைப் பிறப்பின் அடிப்படையில் வெறுக்கும் இயக்கமாக திமுகவை கருணாநிதி வளர்த்தெடுக்கவில்லை.’

கன்னியாகுமரியில் கருணாநிதி எழுப்பிய வள்ளுவர் சிலை அதே இடத்திலுள்ள விவேகானந்தர் சிலை முன்வைக்கும் அரசியலுக்கு மாற்றான ஓர் அரசியலை முன்னிறுத்துகிறது என்கிறார் சமஸ். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்னும் முழக்கத்தைக் கூட்டாட்சிக்கான தத்துவமாக டெல்லி வரித்துக்கொண்டால் தெற்கிலிருந்து பரவும் சூரிய ஓளி இந்தியா முழுவதுக்கும் சென்று சேரும் என்கிறார் அவர்.

ஒரு கேள்விக்கு கருணாநிதி முன்பொருமுறை அளித்த பதிலொன்றும் இதே நூலில் இடம்பெற்றிருக்கிறது. ‘சாதியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல, மதத்தின் ஆதிக்கத்தையும் ஒழித்தாகவேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமுதாய இயக்கங்களும் அப்பழுக்கற்ற ஆர்வமும், செய்தே தீரவேண்டும் என்ற பிடிவாதமும் கொள்ளவேண்டும். அப்போதுதான் நிலைமையைச் சீர்திருத்த வழி உண்டு.’ வெறுப்பரசியலும் வகுப்புவாதமும் ஒற்றைக் கலாசாரமும் தலையெடுக்கும் காலகட்டத்தில் கருணாநிதியின் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம் என்னும் என். ராமின் கருத்து முக்கியமானது.

முடிவாக, இந்நூல் கருணாநிதி குறித்த அறுதியான, இறுதியான மதிப்பீடு அல்ல என்பதால் சமூகம் பதறவேண்டியதில்லை. கருணாநிதியின் அறுபதாண்டு சட்டமன்ற வாழ்வையும் திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக்காலத்தையும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டையும் பரவசத்துடன் கொண்டாடும் ஒரு முயற்சி. முள்களையெல்லாம் கவனமாக நீக்கி, மலர்களை மட்டும் அள்ளியெடுத்து, தொகுத்து இந்தப் பூங்கொத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.

read other news...

Steps to Earn Cashback

1. Join CashMint FREE

2. Visit Retailers via CashMint & Shop

3. Earn Cashback

4. Transfer to Bank as REAL CASH

Featured Stores

Top Stores

New Stores