Movie Review - Dunkirk

July 27, 2017

இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் எந்த வகையில் பார்த்தாலும் டன்கிர்க் ஒரு திருப்புமுனை நிகழ்வல்ல.

பிரான்ஸில் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக் கரையோரம் அமைந்திருக்கும் ஒரு துறைமுக நகரம், டன்கிர்க். 1939ம் ஆண்டு போலந்தின்மீது ஹிட்லரின் ஜெர்மனி போர் தொடுத்து இரண்டாம் உலகப் போரைத் தொடங்கிவைத்தது. (உண்மையில் நடைபெற்றது ஒரே உலகப் போர்தான். 1914ல் தொடங்கி ஓர் இடைவெளிக்குப் பிறகு அது 1945ல் முடிவுற்றது என்று சொல்பவர்களும் உள்ளனர்). போலந்தைத் தொடர்ந்து நெதர்லாந்து, ரோட்டர்டாம், பெல்ஜியம் என்று ஜெர்மனி அடுத்தடுத்து பாய்ந்துகொண்டிருந்தது. பிரான்ஸை நாஜிகளிடமிருந்து பாதுகாக்கவேண்டிய அவசியத்தை பிரிட்டன் உணர்ந்துகொண்டது. பிரிட்டிஷ் வீரர்களைப் பெருமளவு கொண்டிருந்த நேச நாட்டுப் படை பிரான்ஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்குமான எல்லையில் ‘மாகினோட் லைன்’ எனப்படும் பாதுகாப்பு அரண்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன. ஆனால் வடக்குப் பகுதிக்கு மட்டும் இத்தகைய பாதுகாப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. அடர்ந்த கானகங்கள் இருப்பதால் அங்கே ஊடுருவல் சாத்தியமில்லை என்று பிரான்ஸ் நம்பியது. ஆனால் ஜெர்மனி மிகச் சரியாக இந்த வடக்குப் பகுதியில்தான் உள்நுழைந்தது. இதனை எதிர்பார்க்காத நேச நாட்டுப் படையினர் ஜெர்மனியை எதிர்கொள்ள இயலாமல் பெல்ஜியத்தை நோக்கி விரைந்தனர். ஆனால் அங்கும் ஜெர்மானியப் படைகள் சூழ்ந்துவிட்டன. ஜெர்மனியை மோதி விழ்த்தமுடியாது, தப்பிச்செல்வதே உசிதமானது என்பதை பிரான்ஸும் நேச நாட்டுப் படைகளும் உணர்ந்துகொண்டன. ஆனால் தப்பிக்க இப்போது ஒரே ஒரு வழிதான் இருந்தது. டன்கிர்க். எப்படியாவது பின்வாங்கி டன்கிர்க் வந்தடைந்துவிட்டால் அங்கிருந்து தப்பி கடல் மார்க்கமாக பிரிட்டன் சென்றடைந்துவிடலாம். இதுதான் திட்டம்.

ஆனால் எதிர்பார்த்ததைப் போல் எளிதாக இத்திட்டத்தை நிறைவேற்றமுடியவில்லை. கடல், ஆகாயம், நிலம் என்று மூன்று மார்க்கங்களிலும் ஜெர்மனி தாக்குதல் தொடுத்துக்கொண்டே இருந்தது. மரண பயத்துடன் லட்சக்கணக்கான வீரர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி கடலை வெறித்துப் பார்த்தபடி பிரிட்டனின் கப்பல்களுக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். மரணத்தைவிடவும் தோல்வி அவர்களை அதிகம் அச்சுறுத்தியிருக்கவேண்டும். தோல்வியைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் அவமானம் அவர்களைப் பிய்த்துத் தின்றிருக்கவேண்டும். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பிரிட்டன் பல சிறிய கப்பல்களை அனுப்பி கிட்டத்தட்ட 3,30,000 வீரர்களை மீட்டெடுத்துக்கொண்டது. இது நடந்தது 1940ம் ஆண்டு.

ஆம், டன்கிர்க் ஒரு போர்க்களமே அல்ல. அது ஓர் உறுத்தல் மட்டுமே. அச்சம், அவமானம், பயம், தோல்வி அனைத்தையும் நேச நாட்டுப் படைகள் ஒன்றாகத் தரிசித்த ஓரிடம் அது. ஹிட்லரையும் அவரைப் போலவே மூர்க்கத்துடன் ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும் கண்டு அவர்கள் திகைத்து நின்ற சமயம் அது. போர், ராணுவச் சீருடை, ஆயுதம் அனைத்தையும் அவர்கள் மறந்துபோனார்கள். எப்படியாவது வீடு திரும்பவேண்டும். தேசம், எல்லை எதுவும் முக்கியமில்லை. ஹிட்லர் முக்கியமில்லை. சர்ச்சில் முக்கியமில்லை. தோற்றுப்போய் திரும்பும் வீரர்கள் என்று உலகமே பரிகசிக்கும். கோழைகளே, உங்களுக்கெல்லாம் துப்பாக்கி எதற்கு என்று குடிமக்கள் பழிப்பார்கள். வீரன் என்னும் அடையாளமேகூட கேள்விக்கு உட்படுத்தப்படலாம். ஆனால் பரவாயில்லை. வீடு திரும்பினால் போதும்.

கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் இந்த உணர்வுகளை நமக்கு அப்படியே கடத்திவிடுகிறது. காட்சிகளோடு அநாயசமாகப் போட்டியிட்டு வெல்கிறது இசை. கோரமான காட்சிகள் இல்லை. ஒரு துளி ரத்தம்கூட திரையில் சிந்தப்படவில்லை. வீரர்கள் சத்தமின்றி இறக்கிறார்கள். மிகையில்லை. உணர்ச்சிகள் அதிகமில்லை. நாயகர்கள் என்று தனியே யாருமில்லை. டன்கிர்க் வெற்றியாளர்களை உருவாக்கவில்லை. அது சில லட்சம் பேரைத் தப்பியோட அனுமதித்தது. அவர்களைப் பிழைத்திருக்கவும் செய்தது. ஆனால் இப்படிப் பிழைத்தவர்களில் அநேகம் பேர் மீண்டும் போர்முனைக்கு திருப்பியனுப்பப்பட்டு கொல்லப்பட்டனர்.

பிரிட்டிஷ் மக்களின் மனசாட்சியை டன்கிர்க் உலுக்கியெடுத்தது. மக்களிடையே தேசியவாதத்தை அது கிளர்தெழச் செய்தது. வெற்றியோ, தோல்வியோ எங்கள் வீரர்களை நாங்கள் உயிருடன் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டோம், அது போதும் எங்களுக்கு என்று அவர்களால் கணநேரமாவது மகிழ்ந்திருக்கவும்முடிந்தது. அந்த மகிழ்ச்சியை பிரிட்டன் பத்திரப்படுத்திக்கொண்டது. டன்கிர்க் ஒரு வெற்றிக்கதையாக உருமாற்றம் அடைந்தது அப்போதுதான். இப்போது கிறிஸ்டோபர் நோலன் ஒரு படி மேலே சென்று டன்கிர்க்கை ஒரு காவியமாகவே மாற்றிக் காட்டியிருக்கிறார்.

மருதன் - 

read other news...

Steps to Earn Cashback

1. Join CashMint FREE

2. Visit Retailers via CashMint & Shop

3. Earn Cashback

4. Transfer to Bank as REAL CASH

Featured Stores

Top Stores

New Stores